லண்டன் எக்ஸ்பிரஸ் – மதிப்பீடு

எனது வாழ்நாளில் ஒரு முறை கூட மேடை நாடகம் பார்த்ததில்லை. இண்டஸ் கிரியேசன்ஸ் நிறுவனத்தாரின் “லண்டன் எக்ஸ்பிரஸ்” மூலம்  வழியாக அந்த வாய்ப்பு நேற்று கிட்டியது. இதனைப் பார்க்கும் முன்பாக, உண்மையைக் கூறவேண்டுமானால், எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. ஆனால் எனது எண்ணம் எவ்வளவு தவறு என்பதை நிரூபித்தது மட்டுமல்லாமல், இப்படி ஒரு சிறந்த நாடகத்தை பார்க்கும் வாய்ப்பினை தவறவிடவில்லை என்று என்னை பல தடவைகள் நினைக்கவும் வைத்து விட்டது இந்நாடகம்.

ஒரு வார்த்தையில் இதனைப் பற்றிக் கூறவேண்டுமானால் – அருமை. இத்தனைக்கும் இதனை வடிவமைத்தவர்கள், நடித்தவர்கள் அனைவரும் முழுநேரப் பணியில் இருப்பவர்கள். இது போன்ற பொருளாதர சிக்கல் நிறைந்த சூழலில் வேலைப்பளுவினைப் பற்றிக் கூறத்தேவையுமில்லை. அதனையும் மீறி இவ்வளவு சிறப்பாக இதனை நடத்தி முடிக்க அசாத்திய பற்று, அதற்கேற்ற திறமை இருக்க வேண்டும்.

கதையை மூன்றே வரிகளில் கூறிவிடலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் ச்சக் (அல்லது டக் அல்லது சொக் அல்லது பக்) என்ற சொக்கலிங்கம், அவரது மனைவி, மற்றும் குழந்தை (ஆண்டி), பணம் வாங்கிக் கொண்டு 4 வது பந்தில் அவுட் ஆவதற்காகவே இங்கிலாந்து செல்லும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விநய் (கங்குலி ? ), அயல்நாட்டு நிறுவனத்திடம் கடல்நீரை குறைந்த செலவில் குடிநீராக மாற்றும் திட்டத்தை 100 கோடி ரூபாய்க்காக விற்கும் நோக்கத்துடன் லண்டன் செல்லும் தணிக்காசலம் என்ற அரசியல்வாதி, போலி மதிப்பெண் சான்றிதழ்கள் வைத்துக் கொண்டு சியாட்டிலுக்கு வேலைக்குச் செல்லும் சாஃப்ட்வேர் என்ஜினியர் முரளி, அதே ஊரிலேயே படிக்க செல்லும் அவருடைய காதலி ஷாலினி, சியாட்டிலில் வசிக்கும் தனது மகனை பார்க்கச் செல்லும் ஓய்வுபெற்ற ஸ்டேட் பாங்க் வங்கி ஊழியர் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி மரகதம், மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர் மனோகர் ஆகியோர் லண்டன் செல்லும் பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்திற்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் செல்லும் விமானத்தை கடத்தும் நோக்குடன் வருகிறார் ஓர் தீவிரவாதி. இவர்கள் அனைவரும் விமானத்திற்காக காத்திருக்கும் போது, விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. அந்த மிரட்டலை விசாரிக்க வருகிறார் சி.பி.ஐ அதிகாரி பல்ராம் நாயுடு. அவரது விசாரணையின் முடிவில் வெடிகுண்டு மற்றும் அதற்கு காரணமான நபரைக் கண்டுபிடித்தாரா, மும்மூர்த்திகளான விநய் என்ற கருங்காலி (நன்றி: சன் டி.வி டாப் 10) , அரசியல்வாதி மற்றும் தீவிரவாதி எப்படி மாட்டுகிறார்கள் என்பதை மிகவும் கலகலப்பாக காட்டியிருக்கிறார்கள். (சரி, மூன்று வரிகளில் என்னால் கூற எழுத முடியவில்லை.)

இந்நாடகத்தின் சிறப்பம்சம், கதாப்பாத்திரங்களும் (நடிப்பு), நகைச்சுவையும் தான். ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர, மற்ற காட்சிகளில் சிரிக்காமல் இருந்தது போல் ஞாபகம் இல்லை. லொல்லுசபாக்களிலே, சமயங்களில் அரைத்த மாவை அரைத்துக்கொண்டிருக்கும் போது, புதுமையாக வசனங்கள் அமைந்தது சிறப்பு. ஆனாலும் சிற்சில இடங்களில் பழைய ஜோக்குகள் வருவதையும் பார்க்க முடிந்தது – உதாரணம்: “எங்கேயோ போய்டீங்க சார்”, “இந்தியாவிலேயே அதிகமாக பேசுற மொழி எது தெரியுமா?”, “எச்சி தொட்டு கொடுக்காம, பட்டர், ஜாம் எல்லாம் தடவி கொடுப்பாங்களா?” போன்றன.

ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்ட முக்கியமான பாத்திரங்கள் எல்லாம் நன்றாக அமைந்தது இதன் சிறப்பு என்றால், துணைப் பாத்திரங்களில் நடித்திருந்தவர்களின் தேர்வு, அவர்களது நடிப்பு இந்நாடகத்திற்கு மேலும் சிறப்பூட்டியதை மறுக்க முடியாது. காஃபி டேயில் வேலை பார்க்கும் நபர், செக்யூரிட்டி செக்காக வரும் நபர், பயணிகளின் பின்னால் நடந்து சென்று கண்காணிக்கும் ஏட்டு (302?), காவல்துறை ஆய்வாளராக நடித்திருந்தவர் (’நான் கடவுள்’ பட இன்ஸ்பெக்டர் ஒப்பனை?), பிரிட்டிஸ் விமான நிறுவன ஊழியர்கள் (முக்கியமாக அருகில் நின்று கொண்டு பயணிகளின் உடமைகளை பெல்டில் வைக்கும் நபர்), அரசியல்வாதியின் தொண்டன் ட்ட்(டி.ஆர். த டெரர் இன்ஸ்பிரேஷன்) ஆகியோர் நிஜ உலக நபர்களை அப்படியே கண்முன் நிறுத்தினர். அதிலும் பயணிகளின் பின்னால் நடந்து சென்று கண்காணிக்கும் நபரின் செயல் அப்படியே நிஜத்தை ஒத்திருந்தது. சபாஷ்!

 என்னை மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரங்களுள் மிகவும் முக்கியமானது – சந்திரசேகரன் சுப்பிரமணியன். ஆரம்பம் முதல் கடைசி வரை இந்நாடகத்தினை நிலைநிறுத்திய பாத்திரங்களுள் இதுவும் ஒன்று. ஸ்ரீதர் மிக, மிக அற்புதமாக செய்திருந்தார். இவருடைய பழைய மிமிக்ரிகளை பார்க்கும் வாய்ப்பு ஒரு சில வருடங்களுக்கு முன்பாக இணையத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அற்புதம். இவருக்குள் மிகவும் அற்புதமான நகைச்சுவை கலைஞன் இருக்கிறான். அதனை இன்னும் மேன்படுத்தி, சரியான சந்தர்பங்களை உருவாக்கினால் மேன்மேலும் வளர வாய்ப்புக்கிட்டும் என்பதில் ஐயமில்லை.

 அவரது பாத்திரம், அப்படியே ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியரினை கண்முன் வந்து நிறுத்திவிட்டது. சமயத்தில் அவர் நம்மை ஒத்த வயோதிகர் என்பது மறந்து, அவர் ஓர் வாலிபனுக்கு உண்மையான அப்பா போன்று நம்ப வைத்து விட்டது அவரது நடிப்பு – குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் – அவருடைய நடை, சிறிது நடுக்கத்துடன் பேசிய பேச்சு. அவர் பேசும் காட்சிகள் அனைத்தும் அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தின. 

 செட்

விமான நிறுவன ஊழியையிடம் சென்று “We are going to seattle… My son chandru…”, என்று அனைத்தையும் ஒப்பிப்பது.

“நீங்கள் இந்தியன் பேங்கா, ஐ.ஓ.பியா”, என்று கேட்டுவிட்டு, அவர் பேங்கிங் கன்சல்டண்ட் என்று கூறியதும் “ஹிந்துல போட்டுருந்தானே…. உங்களால தான் பெரிய பெரிய கம்பெனி எல்லாம் திவால் ஆச்சுன்னு….. ஆனாலும், நீங்க கொஞ்சம் பார்த்து செஞ்சுருக்கலாம்…”, என்று கூறுவது…

ஆண்டியிடம் பேசிய பிறகு… “நம்ம சார்ட் ஹேண்ட் எவ்வளவோ பரவாயில்லை…சப் டைட்டில் இல்லாம ஒரு மண்ணும் புரியாது போல…” என்று கூறிவிட்டு,

“பையன் என்ன சொல்லுறான்?” என்று கேட்கும் மனைவியிடம்.. “அங்க உள்ள ஸ்கூல்ல மூணாங்கிளாஸ் (ஏதோ ஒரு கிளாஸ்) படிக்கிறானாண்டி… லஞ்சுக்கு, அவாளே சரவணபவன்ல இருந்து எல்லாம் வாங்கி கொடுத்துடறாலாம்”, என்று கூறுவது…

“அய்யோ தயிர்வடைக்கே இப்படின்னா, நான் இட்லி எல்லாம் வச்சு இருக்கேனே.. அதுக்கு என்ன ஆகுமோ?”, என்று புலம்புவது

சொக்கலிங்கத்திடம் நடக்கும் உரையாடலில்

முரளி: யு.எஸ் ல என்ன பண்ணுறீங்க?

சொக்: ஒரு கம்பெனில வொஸ் பிரசிடண்டா இருக்கேன்.

முரளி: வாவ், எத்தனை பேர் வேலை பார்க்குறாங்க?

சொக்: யு நோ, அது ஒரு சாட்ர்ட் அப், அதனால ரெண்டு பேர்..

சந்திரசேகர்: 2 பேர். அப்ப இன்னும் ஸ்டார்டே ஆகலைன்னு சொல்லுங்க… ஆமா…இன்னொருத்தர் யார்? காஃபி பாயா?

சொக்: நோ நோ, அவர் தான் எங்க கம்பெனி சி.இ.ஓ.

சந்திரசேகர்: ஓ. அவர் இல்லையா… அப்ப நீங்க தான் காஃபி பாயா? என்று அவரை வாரிவிடுவது

என்று அனைத்து இடங்களிலும் சாதாரணமாக செய்திருக்கிறார். இந்நாடகத்தின் முதுகெலும்பு என்று இவரது பாத்திரத்தைக் கூறலாம். (அப்ப வயிறு, தொப்பை எல்லாம் யாரு என்று கேட்கக்கூடாது).

அவருடைய மனைவியாக நடித்திருந்தவரும், மிக, மிக யதார்த்தமாக நடித்திருந்தார். “எப்பப்பாரு ஹிந்து புராணம் தான்…”, “சந்துரு என்ன சொன்னான்? ஏர்போர்ட்ல உட்கார்ந்து டெரரிஸ்ட், பாம் எல்லாம் பேசக்கூடாதுன்னு சொன்னனானல” (இன்னும் சில வசனங்கள் ஞாபகம் இல்லை). ஆனால், மிக நிதானமாக அமைந்த அவரது பேச்சு, நடை, உடை பாவனை அப்படியே அந்தப் பாத்திரத்திற்கு மிகவும் பொருந்தி அமைந்திருந்தது.

அந்த அரசியல்வாதியின் பாத்திரத்தில் சிக்ஸர் அடித்திருக்கலாம் (’நேர்மை உறங்கும் நேரம்’, சோ பாத்திரம் போல்) – ஆனால் சிறிது அடக்கியே வாசித்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பாத்திரத்திற்கான ஒப்பனை, திருநெல்வேலி பாஷை மிகவும் சிறப்பு. அவரது வேஷ்டி சட்டை, கண்ணாடி, வழித்து சீவிய தலைமுடி முக்கியமாக அந்த பச்சை நிற கல் வைத்த மோதிரம் – அபாரம். அவரது பேச்சு வழக்கு, பெரும்பாலான திரைப்படங்களில் திருநெல்வேலி பாஷையை பேசும் நபரின் பேச்சு வழக்கை அப்படியே ஒத்திருந்தது ஆச்சர்யம். அங்கங்கே அஜூத்தின் நெடி .

அரசியல்வாதி

எப்பொழுதும் சாப்பாட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் ஆண்டியிடம் அரசியல்வாதி கூறும் “ஆண்டின்னு பேரு வச்ச உனக்கு சோறு வக்கலையா”, வசனம் நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

அதே போல, கிரிக்கெட் வீரர் விநய்க்கும், மார்க்கிற்கும் நடக்கும் உரையாடல்.

 ”உங்களுக்கு மூணு கோடி வாங்கி கொடுத்துடுறேன்.. ஆனா சொன்னது மாதிரி நாலாவது பால்ல, அவுட் ஆகிடனும்”

“யோவ்.. கோடின்னு கத்தி கத்தி பேசாதய்யா.. கேட்டுட போகுது….”

 ”சரி..உங்களுக்கு மூணு தயிர்வடை வாங்கி கொடுத்துடுறேன்.. சரியா?”

 ”யோவ்.. 3 தயிர்வடை எல்லாம் காணாது.. ஐஞ்சு தயிர்வடை இல்லாம, என்னோட பசியே அடங்காது.”

“அஞ்சா? எனக்கே அரை தயிர்வடை தான் கமிஷன்”

 

 இன்னும் இருவரைப் பற்றிக் கூறாமல் இம்மதிப்பீடு நிறைவடையாது என்பது என் கருத்து. 1. பல்ராம் நாயுடு. 2. தீவிரவாதி.

பல்ராம் நாயுடு, இன்ஸ்பெக்டர்

 தீவிரவாதிக்கு மிகக் குறைவான வசனங்களே. இருந்தாலும் அவர் வந்த முதல் காட்சியிலேயே சிரிப்பு வெடி. அவரது தோற்றம் , “அங்க போ ஸொல்லலையில…” என்று அவர் பேசும் சென்னைத் தமிழ், அவரது பாஸூடன் (கஜினி மொட்டை) வரும் உரையாடல் போன்றன மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

 பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன ஊழியரிடம்:

 ”மேடம்ஸ்… ஃபிளைட் எந்த பிளாட்பாரத்துல நிக்கும்?”

 ”ஏங்க, இங்க டீக்கடை எங்க இருக்கு?”

சந்திரசேகரிடம்:

“பாம் வைக்குறது எல்லாம் இப்ப ஈஸி இல்ல அய்யரே… ஒரு கத்திய கொண்டு வர்றதுக்கு முன்னாடி தாவு தீந்துருது…”

 பாஸிடம்:

 ”அப்ப இன்னொரு மாரி இருக்கானா பாஸ்?”

 ”டேய் இது வேற ‘மாறி’டா”

“உடனே ஃபோன் பண்ணி சொல்லு….”

 ”உடனே எல்லாம் வேண்டாம் பாஸ். ஃபிளைட் லேண்ட் ஆனதும், தற்போது உங்க ஃபோன் எல்லாம் ஆன் பண்ணிக்கோங்கன்னு சொல்லுவாங்கல்ல.. அப்ப பண்ணுறேன் பாஸ்”

 ”கழுத்துல கத்திய வச்சு, ‘வேர் இஸ் த டிரைவர்’ அப்படின்னு கேட்பேன்”.

 ”அவங்க ஜூஸ் கொடுக்க ஸொல்ல, ஐஸ்லாம் போடுவாங்களா பாஸ்?”…

சிரித்து முடியவில்லை. அவருக்கும் இன்னும் நிறைய காட்சிகள் கொடுத்து இருக்கலாம்; இன்னும் நன்றாக இருந்திருக்கும். பல்ராம் நாயுடு, அப்படியே தசாவதாரம் நாயுடுவினை நேரில் கொண்டு வந்து விட்டார் (சிற்சில வசனங்களையும் சேர்த்து கொண்டு வந்துவிட்டார்கள் – ஆனால் பரவாயில்லை; பொருந்தி அமைந்திருந்தது). அற்புதம்.

அதிலும், “இன்ஸ்பெக்டர் ஃபாலோ மீ”, என்று கூறியதும், இன்ஸ்பெக்டர், “எஸ். ஸார்”, என்று கூறிவிட்டு அவருக்கு முன்பாக நடந்ததை பார்த்ததும், கொடுக்கும் அந்த முகபாவம். ஆஹா, அற்புதம்!

“உங்களுக்கெல்லாம் பொறுப்பு இருக்காய்யா? இதுவரைக்கும் யாருக்காவது எனக்கு லட்டு கொடுக்கணும்னு தோணி இருக்காய்யா?”

 ”செக்-இன் பண்ணுன, அந்த லக்கேஜை அப்படியே செக்-அவுட் பண்ணுயா… அப்படியே அதுல இருக்குற பருப்பு பொடிய கொண்டு வந்து எங்கிட்ட கொடுய்யா”

“ஏய்யா… கொஞ்ச நேரம் கார்ல யார் கூட வந்தாலும், எல்லா கதையையும் சொல்லிடுவியாயா?” (அதற்கு முன்பாக அந்தப் பாதுகாவலர் கொடுக்கும் செய்கையும் பிரமாதம்)

“ஏய்யா.. உன்னை பணம் செலவு செஞ்சு வெளிநாட்டுல விளையாட அனுப்புனா, உனக்கு முட்டை போடுறதுக்கு தயிர்வடை கேக்குதா?” போன்ற வசனங்கள் மிக ரம்யமாக அமைந்திருந்தது.

 

(உண்மையிலேயே இதற்கெல்லாம், குப்புறபடுத்து யோசித்திருக்க வேண்டும்).

விநய், தீவிரவாதி

அதே போல, இந்நாடகத்தின் மூலமாக, இலங்கைத் தமிழர்கள் மீது சிலர் கொண்டுள்ள தவறான பார்வையை கண்டிக்க முயன்றிருப்பதற்கு பாராட்டுக்கள். ஆனாலும், அந்த அரசியல்வாதியை காப்பாற்ற முயன்றது நாடகத்தன்மை. நானிருந்திருந்தால் அவர் சாகட்டும் என்று விட்டிருப்பேன்.

 இவை அனைத்தும் போதாது என்பது போல், இந்நாடகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது – அரங்க அமைப்பு (செட்). மிக அழகு! விமான நிலையத்தையே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். உதாரணத்திற்கு –

  1.  செக்-இன் செய்யும் இடம் (அங்கே இருந்த டிஸ்பிளேக்கள்)
  2.  செக்யூரிட்டி செக் செய்ய உதவும் Scanner கருவி
  3.  குடிநீர், மின் தூக்கி என்று எழுதப்பட்டிருந்த அந்த மஞ்சள் நிற அறிவிப்புப் பலகைகள்
  4.  காஃபி டே செட் மிக அபாரம்!. சில காட்சிகள் தொடங்கும் போதே கிடைத்த கைத்தட்டல்களே அதற்கு சாட்சி.

 டைமிங், நகைச்சுவை நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது. காலந்தவறிய நகைச்சுவையானது, ஆறிப் போன தோசையைப் போன்றது. சுவை இருக்கலாம், ஆனால் காலம் தவறியதால் அதனை சூடாக உண்பதால் உண்டாகும் அகமகிழ்ச்சி குறைந்து விடும். அது போன்ற குறைகள், இந்நாடகத்தில் மிகச் சிறிய அளவிலேயே காண முடிந்தது. அந்த நகைச்சுவையும், இப்பாத்திரங்களில் தோன்றி நடித்த நடிகர்களின் அசாத்திய நடிப்புத் திறமையும், ஒப்பனை மற்றும் அரங்க அமைப்பும் இதனை ஓர் சிறந்த நாடகமாக்கியது என்பது என் கருத்து.

 இன்னும் சிறிது மேம்படுத்தினால், இதனை அல்லது இது போன்ற நாடகங்களை, இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்களின் அபிமானத்தை பெறவைக்க முடியும். அதற்கான திறமை இக்குழுவினரிடம் இருக்கிறது – மேலும், அதற்கான முயற்சிகளில் அவர்கள் வரும் காலங்களில் இறங்கவேண்டும். தமிழர்களின் சிறப்பு – அவர்களது மொழி, பண்மை, இசை, உழைப்பு, மற்றும் நகைச்சுவை உணர்வில் தான் இருக்கிறது என்பது எனது கருத்து. அந்த நகைச்சுவையில், ஒரு சிறப்பான நாடகத்தினை எனது சக ஊழியர்கள் நடத்தியதை நினைத்துப் பெருமையடைகிறேன். உழைப்பிற்கு நன்றி. சிரிப்பிற்கு நன்றி!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: